கோவை: கோவையில் அலறல் சப்தத்துடன் ஒரு இளம் பெண்ணை காரில் வேகமாக கடத்திச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணை, நேற்று மாலை வெள்ளை நிற காரில் வந்த சிலர், வலுகட்டாயமாக இழுத்துக் காரில் ஏற்றிச் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதுதொடர்பாக, சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு உடனடியாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், பெண் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? யார் அந்த இளம் பெண்? அந்தக் கார் எங்கு சென்றது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில், காரில் இருந்த பெண் அலறும் சப்தம் கேட்கிறது. பின்னர் வேகமாக அந்த காரை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு பின்புறம், கல்லூரி மாணவியை மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, தமிழகம் - கேரளம் எல்லையான வாளையார் பகுதியில் இளம்பெண்ணை மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோஸ்ட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரியின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கோவையில் அடுத்தடுத்து இளம் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.