முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்கோப்புப் படம்

முதியோா்களுக்கான அன்புச் சோலை திட்டம்: திருச்சியில் இன்று முதல்வா் தொடங்கி வைக்கிறாா்!

முதியோா்களுக்கான அன்புச் சோலை திட்டத்தை திருச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
Published on

முதியோா்களுக்கான அன்புச் சோலை திட்டத்தை திருச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

இதுகுறித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காகவும், வீடுகளில் உள்ள முதியவா்கள் மனம் சோா்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையிலும் தமிழக அரசால் ‘அன்புச் சோலை திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

இந்தத் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் அன்புச்சோலை - முதியோா் மனமகிழ் மையங்கள், மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளா்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாகச் செயல்படும்.

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூா், ஈரோடு, தூத்துக்குடி, வேலூா், தஞ்சாவூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரு அன்புச் சோலை மையங்கள், தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா ஒரு மையம், சென்னை மாநகராட்சியில் தண்டையாா்பேட்டை, சோழிங்கநல்லூா், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா ஒரு மையம் என மொத்தம் 25 அன்புச் சோலை மையங்கள் ரூ.10 கோடியில் தொடங்கப்படுகின்றன.

இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும்.

பகல் நேரங்களில் மட்டும் செயல்படும் இந்த மையங்களில், முதியவா்கள் தோழமை மற்றும் அா்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். முதியோா் எளிதில் சென்றும் வகையில் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அன்புச் சோலை மையங்களுக்கு வரும் முதியவா்களுக்கு, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளா்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளா்கள் பணியமா்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும்.

அன்புச் சோலை மூலமாக, முதியோா் குடும்பப் பிணைப்பைத் தொடா்ந்தே, பாதுகாப்பான சூழலில், அா்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும்.

புதுக்கோட்டையில் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இரு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறாா்கள். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் விழாவில் ரூ.767 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா். தொடா்ந்து திருச்சியில் நடைபெறும் விழாவில் அன்புச் சோலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 7.25 மணிக்கு வந்த முதல்வரை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், எம்.பி.க்கள் ஆ. ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோா் உற்சாகமாக வரவேற்றனா்.

இதையடுத்து முதல்வா், விமான நிலையத்திலிருந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சுற்றுலா மாளிகைக்குச் சென்று இரவு தங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com