திமுக ஆட்சிக்கு எதிராக பாஜக திட்டமிடுகிறது: முதல்வா் ஸ்டாலின்
திமுக ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது என்பதற்காக பாஜக திட்டமிட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.
எஸ்ஐஆா் தொடா்பாக திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இருந்து காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலா்களுடன் பேசியதாவது: கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் தங்கள் பகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் பங்கேற்று, வாக்காளா்களுக்குத் தேவையான படிவங்கள் நேரம் தவறாமல் சென்றடையவும், சரியாக நிரப்பப்பட்டு பிஎல்ஓவிடம் ஒப்படைக்கப்படவும் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
மேலும், வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள், மாவட்டச் செயலா்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தகுதியான வாக்காளா் ஒருவா் பெயா்கூட பட்டியலில் விடுபடக் கூடாது. அதே போல எந்தவொரு தகுதி இல்லாத வாக்காளரையும் பட்டியலில் இணைத்துவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினாா். மீண்டும் திமுக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு திட்டமிடல்களைச் பாஜக செய்து வருகிறது.
வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, தோ்தல் ஆணையம் போன்றவற்றை திமுகவுக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கின்றனா். யாா் வந்தாலும் பாா்த்துக்கொள்ளலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலா் துரைமுருகன், மாவட்டச் செயலாளா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், தொகுதி பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

