

அரியலூர்: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த வாரணவாசி பிள்ளையார் கோயில் அருகே சமையல் எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) ஏற்றிச்சென்ற லாரி சாலையோர வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின.
வாரணவாசி பிள்ளையார் கோயில் அருகேயுள்ள ஆபத்தான சாலையோர வளைவில், அவ்வப்போது வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இந்த வளைவை அகலப்படுத்தி விபத்தை தடுக்குமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகேயுள்ள இன்டேன்ஸ் சிலிண்டர் கிடங்கில் இருந்து, நிரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு, அரியலூரிலுள்ள ஒரு தனியார் கேஸ் நிறுவனத்துக்கு லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை இனாம்குளத்தூரைச் சேர்ந்த கனகராஜ்(வயது35) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது, வாரணவாசி பிள்ளையார் கோயில் சாலையோர வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் கனகராஜ் உடனடியாக கீழே குதித்ததில் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். சிறிது நேரத்தில், அழுத்தத்தின் காரணமாக சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்துச் சிதற ஆரம்பித்தன. சில சிலிண்டர்கள் வெடித்து பல்வேறு இடங்களில் சிதறி தூக்கி வீசப்பட்டது.
பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலும் சிலிண்டர்கள் வெடிக்கும் சப்தம் கேட்ட நிலையில், அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக கனகராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கீழப்பழுவூர் காவல் நிலையத்துக்கும், அரியலூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இருப்பினும் அதற்குள் லாரி முழுவதுமாக தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
வாரணவாசி சாலையில் செல்ல தடை
சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையிலான காவல் துறையினர், திருச்சி - அரியலூர் சாலையில் வாகனங்கள், மக்கள் செல்ல தடைவிதித்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நான்கு புறமும் தடுப்பு அரணைகளை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
விபத்து நடந்த பகுதியில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு வீடுகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக திருச்சி, தஞ்சாவூரில் இருந்து அரியலூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வி.கைகாட்டி வழியாக திருப்பி விடப்பட்டன.
இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.