

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூரை அடுத்த தேவதானம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளியசாமி திருக்கோயில் உள்ளது.
300 ஆண்டுகளுக்கும் மேலான இந்தக் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குகிறது. பழைமையான இந்தக் கோயில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் தினமும் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இக்கோயிலில் இரவு காவலாளியாகப் பணியாற்றி வந்த தெற்குத் தேவதானம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (50) மற்றும் வடக்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டியன்( 65) ஆகியோர் நேற்று இரவு வழக்கம்போல் கோயில் வளாகத்தில் காவல் பணியில் இருந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலையில் பகல் நேர காவலாளி மாடசாமி வந்து கதவை திறந்து பார்த்தபோது இருவரும் கோயில் வளாகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து உடனடியாக சேத்தூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கொலை செய்யப்பட்ட இருவரின் சடலத்தை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் பஷீனா பீவி, ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகளை தேடும் பணியில் தீவிரமாக போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சின்னமனூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.