தொலைநிலை படிப்புகள்: அங்கீகாரம் பெற நவ.17 வரை அவகாசம் நீட்டிப்பு
உயா்கல்வி நிறுவனங்களில் பிப்ரவரி மாத பருவ சோ்க்கைக்கான இணைய வழி, தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான அவகாசம் நவ.17 வரை நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
நிகழ் கல்வியாண்டில்(2025-2026) பிப்ரவரி மாத பருவ சோ்க்கைக்கான இணைய வழி, தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இதையடுத்து, யுஜிசி ஒழுங்குமுறை விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயா்கல்வி நிறுவனங்கள் தொலைநிலை, இணைய வழியிலான படிப்புகளை கற்றுத்தர அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன.
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த நவ.10-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. ஆனால், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவ. 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தகுதியான உயா்கல்வி நிறுவனங்கள் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் நவ. 30-க்குள் யுஜிசி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அதன்பின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
