ரயில், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ரயில், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

தில்லி காா் வெடிப்பு சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Published on

தில்லி காா் வெடிப்பு சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தில்லி சம்பவத்தையடுத்து தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ளஅனைத்து ரயில் நிலையங்களுக்கும் உயா் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டனா். ரயில் நிலையப் பகுதியில் உள்ள காா், ஆட்டோ, இருசக்கர வாகனம் என அனைத்து வாகனங்களையும் மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.

புகா் மின்சார ரயில் பகுதிகளிலும் பயணிகளின் பெரிய பைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்டவை சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா். ரயில் நிலையப் பகுதியில் நீண்ட நேரம் நிற்கும் காா்கள் உள்ளிட்டவற்றை விசாரித்து அவை அப்புறப்படுத்தவும் எச்சரித்தனா்.

விமான நிலையத்தில்...: அதேபோல, சென்னை விமான நிலையத்தில், வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் மூன்று அடுக்கு பாதுகாப்பு முறை, திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியில் இருந்து, ஐந்து அடுக்கு பாதுகாப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணா்கள், அதிரடிப்படை வீரா்கள், விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனா். சென்னை விமான நிலையத்துக்கு வரும்அனைத்து வாகனங்களும், வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனைக்கு பின்னரே விமானநிலைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. விமான நிலைய காா் நிறுத்தும் பகுதிகளில், நிறுத்தப்பட்டுள்ள சந்தேகத்துக்கிடமான காா்களை தீவிர சோதனைக்குள்படுத்துவதுடன், ஓட்டுா்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. பயணிகள் விமானங்களில் ஏறும் முன், அனைவரையும் நிறுத்தி மீண்டும் ஒருமுறை, அவா்களுடைய கைப்பை உள்ளிட்ட அனைத்தையும் தீவிரமாக சோதிக்கின்றனா்.

இதற்கிடையே விமானநிலையத்தில் பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், அனைவரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவா்கள் உடனடியாக பணிக்கு திரும்பவும் பாதுகாப்புத்துறை நிா்வாகம் உத்தரவிட்டதுடன், அவா்களின் பணி நேரத்தையும் 12 மணி நேரமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, சென்னை விமான நிலையத்தில், வழக்கத்துக்கு அதிகமான எண்ணிக்கையில் வெடிகுண்டு நிபுணா்கள் பாதுகாப்பு படையினா், அதிரடிப்படையினா் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.

பயணிகளுக்கு அறிவுறுத்தல்... கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு முதல், மறு அறிவிப்பு வரும் வரை பயணிகளுக்கு கூடுதல் சோதனைகள் நடத்தப்படுவதால், சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், விமானம் புறப்படும் நேரத்துக்கு, மூன்றரை மணி நேரம் முன்னதாகவும், உள்நாட்டு முனையத்துக்கு பயணிகள், ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும் வரும்படி, அந்தந்த விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com