

நவம்பர் மாதம் என்றாலே மழை நாள்கள் அதிகம் இருக்கும் என்பதால், பள்ளி மாணவர்களுக்கு உற்சாகமான மாதமாக இருப்பது வழக்கம்.
ஆனால், அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் இந்த நவம்பர் மாதத்தில் இதுவரை பெரும்பாலும் தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லாமல் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்படவில்லை.
இந்த நிலையில்தான், பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, நவம்பர் மாதம் 3வது மற்றும் 4வது வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி வரப்போகிறது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மழை நிலவரம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நவம்பர் 17/18 அன்று தமிழக கடற்கரை மாவட்டங்கள் முழுவதும் கிட்டத்தட்ட 2 வாரங்களுக்குப் பிறகு மழைக்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு, அனைத்து வானிலை அமைப்புகளும் இணைந்து நல்ல ஒருமித்த சூழல் உருவாகி வருகிறது.
இந்த நாள்களில், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முதல் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் வரையிலான பகுதிகள்தான் மழைக்கு, முக்கிய இலக்காக இருக்கும்.
இது, நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் புயல் சின்னம் உருவாகும் முன் உள்ள அதிகபட்ச வாய்ப்பாகும் என்று தெரிவித்திருந்தார்.
எப்படி இருக்கும் நவம்பர் மாதம்?
தமிழ்நாடு அண்மைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் மோசமான மழைப்பொழிவை நோக்கிச் செல்கிறதா? என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், தமிழ்நாட்டின் நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 181.7 மி.மீ. ஆகும்.
பதிவான தரவுகளின்படி பார்த்தால், நவம்பர் மாதத்தில் நல்ல மழை பெய்யும்போதெல்லாம், ஒட்டுமொத்த வடகிழக்கு பருவமழை அரிதாகவே பொய்த்திருக்கிறது. உதாரணமாக, 2021 ஒரு வரலாற்று நவம்பர் மாதமாகும், ஒரு மாதத்திற்கு 400 மி.மீ. மழைப்பொழிவு கூட இருந்தது.
2018 - 159.1 மி.மீ.
2019 - 125.8 மி.மீ.
2020 - 203.3 மி.மீ.
2021 - 425.3 மி.மீ.
2022 - 178.5 மி.மீ.
2023 - 233 மி.மீ.
2024 - 140.2 மி.மீ.
2025 - 15.1 மி.மீ. (10.11.2025 வரை)
இதனைப் பார்த்தால், கடந்த காலங்களில் இல்லாத வகையில், ஒரு மோசமான நவம்பர் மாதத்தை தமிழகம் சந்திக்கும் என்றே கருதப்படுகிறது.
ஆனால், அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிடவில்லை. வரும் 17 - 20ஆம் தேதிகளிலும், 24 - 26ஆம் தேதிகளிலும் ஒரு நாள் கூடுதலாகவோ குறைவாகவோ தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.
தமிழகத்தில் நவம்பர் 17 - 20 வரையிலான மழைப்பொழிவு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் கூட, இந்த மழைப்பொழிவை வைத்து வழக்கமான மழை அளவை எட்ட முடியாது. தற்போதைய கேள்வி எவ்வாறு நாம் 125 மி.மீ. கடக்கப் போகிறோம் என்பதே? இதுதான், கடந்த பத்தாண்டுகளில் அதாவது 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழை அளவு. ஒருவேளை இதையாவது அடைந்துவிட்டால், நாம் ஓரளவுக்கு சமாளித்துவிடலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. நிதீஷ் குமார் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.