

சென்னை: சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள், பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தி வழங்குதல், சுயதொழில் தொடங்கிட மானியம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் ஆகியவற்றினை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு அவர் பேசுகையில், சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் ஓய்வு அறை அமைக்கப்படும். 300 சதுர அடியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வு அறை விரைவில் கட்டித்தரப்படும்.
தன்னலம் கருதாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் சேவையை அனைவரும் போற்றுவோம். தூய்மைப் பணியாளர்கள் செய்வது வேலையல்ல, சேவை, அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
2022ல் தூய்மைப் பணியாளர்களின் மேம்பாட்டு நலனுக்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தேன். வரும் டிச. 6ஆம் தேதி உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், அதாவது டிச.6 முதல் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் 3 வேளை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும், மக்களும் குப்பைகளை தூக்கி வீசக் கூடாது, தரம் பிரித்துத் தர வேண்டும்.100 சதவீத ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நகர தூய்மைக்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும், துய்மைப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம், சுயமரியாதை உயர வேண்டும் என்று வலியுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
இதையும் படிக்க.. ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனை வாங்கியது சிஎஸ்கே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.