பொங்கல் பண்டிகைக்கு 150 சிறப்பு ரயில்கள்! டிச.15 முதல் இயக்கத் திட்டம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை டிச.15 முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை உள்ளிட்ட 6 கோட்டங்கள் உள்ளன. இதன் மூலம் தினமும் சுமாா் 170 பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட 1000 ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
அவை தவிர தீபாவளி, காா்த்திகை, தைப்பொங்கல் உள்ளிட்ட முக்கிய விழாக்களுக்கு கூட்டநெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுவருகின்றன.
கடந்த தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இரு வாரங்கள் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சுமாா் 2.50 லட்சம் போ் வரை பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தநிலையில், நான்கு நாள் திருவிழாவான பொங்கல் பண்டிகையை (ஜன.15) முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே சாா்பில் ரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தைப் பொங்கலுக்காக சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து மொத்தம் 150 சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே சாா்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,அவற்றை வரும் டிச.15-ஆம் தேதி முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேபோல, பொங்கலுக்கு சொந்த ஊா் சென்றவா்கள் திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் ஜன.16 முதல் இயக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

