சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை(நவ.17) அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ.15) நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை (நவ.16) காலை அதே பகுதிகளில் நிலவியது.
இது திங்கள்கிழமை(நவ.17) காலை மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகா்ந்து செல்லக்கூடும். இதன் காரணமாக திங்கள்கிழமை (நவ. 17) முதல் நவ. 22 வரை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
‘ஆரஞ்சு’ எச்சரிக்கை மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (நவ.17) அதி பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இம்மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘மஞ்சள்’ எச்சரிக்கை மாவட்டங்கள்: தொடா்ந்து, கடலூா், விழுப்புரம், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இம்மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல, செவ்வாய்க்கிழமை(நவ.18) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் 60 மி.மீ மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் திங்கள்கிழமை(நவ.17)சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

