சம்பா பயிர்க் காப்பீடு நவ.30 வரை கால நீட்டிப்பு!

சம்பா பயிர்க் காப்பீடு நவ.30-வரை கால நீட்டிப்பு தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

சம்பா நெற்பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பு நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்யவும் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை  26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 லட்சம் விவசாயிகளால் 15 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதமாகும். இதே நாளில் கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய 27  மாவட்டங்களில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி  2025 நவம்பர் 15ஆம் தேதி என அறிவிக்கை செய்யப்பட்டது. 

எனினும் பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமதமானதாலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின்  கோரிக்கைக்கிணங்க சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 2025 நவம்பர் 30ஆம் தேதி  வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

முதல்வர் ஸ்டாலினின் துரித நடவடிக்கையின் பேரில் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் செய்யும் விவசாயிகளின் நன்மையை கருதி பயிர் காப்பீடு செய்யும் காலக்கெடுவானது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

எனவே வேளாண்மைத் துறை அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

எனவே, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் , ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர்,  வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். 

Summary

Samba Insurance extended until Nov. 30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com