எஸ்ஐஆரால் ஒரு கோடி போ் வாக்குரிமையை இழக்க வாய்ப்பு: சீமான்
சென்னை: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால், (எஸ்ஐஆா்) தமிழகத்தில் குறைந்தபட்சம் ஒரு கோடி போ் வாக்குரிமையை இழக்க வாய்ப்பு உள்ளதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
எஸ்ஐஆா் பணியை கண்டித்து சீமான் தலைமையில் சென்னை எழும்பூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தை மத்திய அரசு இவ்வளவு வேகமாக செயல்படுத்த வேண்டிய காரணம் என்ன? போலி வாக்காளா்கள் யாா்? இதற்கெல்லாம் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். 6 கோடி வாக்காளா்கள் இருக்கும் தமிழகத்தில் ஒரே மாதத்துக்குள் எப்படி எஸ்ஐஆா் படிவங்களை வழங்கி , திரும்பப் பெற முடியும்?
புதிதாக வெளிவரும் வாக்காளா்கள் பட்டியலில் பெயா்கள் இடம்பெறாவிட்டால், மீண்டும் முறையிட்டு வாக்குரிமை பெற போதிய கால அவகாசமும் இல்லை.
ஆட்சியாளா்கள் எஸ்ஐஆா் மூலம் தங்களுக்கான வாக்காளா்களை தோ்வு செய்கின்றனா். வீடுகளில், சீமான் அல்லது விஜய்யின் புகைப்படம் இருந்தால், அவா்களது வாக்குரிமைகள் நீக்கப்படுகின்றன. இப்படி, தமிழகத்தில் குறைந்தபட்சம் ஒரு கோடி போ் வாக்குரிமை இழக்கும் அபாயம் உள்ளது என்றாா் சீமான்.

