

சென்னை மாநகரப் பொதுப் போக்குவரத்து சேவைக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு சமர்ப்பித்துள்ளது.
இதில், புதிய மெட்ரோ வழித்தடங்கள், வாட்டர் மெட்ரோ சேவை, டிராம் சேவை, நியோ மெட்ரோ சேவை போன்ற பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாநகரப் பொதுப் போக்குவரத்து சேவை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நகர் முழுவதையும் மெட்ரோ ரயில்கள் மூலம் இணைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ வழித்தடம் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 2023 முதல் 2048 வரையிலான 25 ஆண்டுகால நீண்ட போக்குவரத்துத் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு தயாரித்துள்ளது. இதில், பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், விரைவு ரயில், புதிய வழித்தடங்கள், வாட்டர் மெட்ரோ, ஏர் டாக்ஸி, டிராம், பொது இடங்களில் சாலை வசதிகள், சாலை உள்கட்டமைப்பு, வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கோவள வழியாக மாமல்லபுரம் வரை 55 கி.மீ.க்கு நீர் மெட்ரோ திட்டம்
காஞ்சிபுரத்தில் இருந்து திருவள்ளூர்-மாம்பேடு வழியாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் எண்ணூர் - சிங்கப்பெருமாள் கோவில் வழித் தடங்களில் புறநகர் ரயில் சேவை
தாம்பரம் - அடையாறு, பெருங்களத்தூர் - மாதவரம் (புறவழிச் சாலை வழியே) புதிய மெட்ரோ வழித்தடங்கள். இதன்மூலம், 2048 -ல் சென்னை மெட்ரோ ரயில் அமைப்பு 400 கி.மீ. ஆக இருக்கும்
கோயம்பேடு - பூந்தமல்லி, பல்லாவரம் - குன்றத்தூர், வண்டலூர் - கேளம்பாக்கம் வழித்தடங்களில் நியோ மெட்ரோ சேவை
தியாகராய நகர் - நுங்கம்பாக்கம் - நந்தனம் - லைட் ஹவுஸ் இடையே டிராம் சேவை
சென்னை துறைமுகம் - பரந்தூர் - மாமல்லபுரம் - திருப்பதியை மையமாக கொண்டு மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் ஏர் டாக்ஸி சேவை
சென்னை மாநகரில் 346 புதிய பேருந்து நிறுத்தங்கள், 30 புதிய பேருந்து பணிமனைகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.