

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக வருவாய்த் துறையினரை போராட்டத்துக்கு தூண்டிவிட்டது திமுக அரசுதான் என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 89 ஆவது நினைவு நாளையொட்டி இன்று நெல்லையில் மாநகராட்சி அலுவலகம் எதிரே மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றுவதில் பிரதமர் மோடி முதல் நபராக இருக்கிறார். அறிவுத் திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி விட்டு அதற்கு எதிராகவே திமுகவினர் பேசியிருக்கிறார்கள். திமுகவினர் நாட்டு மக்கள் நலனுக்காக ஒருபோதும் உச்ச நீதிமன்றம் செல்வதில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராகவே தமிழக அரசு போராடி வருகிறது. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. எஸ்ஐஆருக்கு எதிராக வருவாய்த் துறை அலுவலர்களை திமுக அரசுதான் தூண்டிவிட்டுள்ளது.
துப்புரவுப் பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு இப்போது அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை எல்லாம் நிரந்தர உணவு மட்டுமே. திமுகவுக்காக வேலை பார்த்த பிரசாந்த் கிஷோரின் கட்சி, பிகார் தேர்தலில் இரண்டு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களை வைத்து வேலை பார்த்தால் என்னவாகும்?
விஜய் பாஜகவுடன் கூட்டணியில் இணைவார் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், 'அவர்களுடைய ஆசை நிறைவேறட்டும்' என்றார்.
மேலும் பேசிய அவர், கூட்டணி தொடர்பாக ஜனவரியில் பேசி முடிவெடுக்கப்படும். கூட்டணியால் மட்டும் ஆட்சியை பிடித்துவிட முடியாது. இதற்கு முந்தைய காலங்களில் வலுவான கூட்டணி அமைத்த கட்சிகள்கூட தோல்வியைச் சந்தித்து இருக்கின்றன.
திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்- ஒழுங்கு சரியில்லை. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. கிராமங்கள்தோறும் கஞ்சா புழக்கத்தில் உள்ளது. திமுக அரசு அதை கண்டும் காணாமல் உள்ளது. மக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. தமிழக மக்களைவிட திமுக அரசு தன் மக்களே முக்கியம் என்று உள்ளது. துணை முதல்வர் உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்காக திமுக முயற்சி செய்து கொண்டிருக்கிறது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.