

தமிழகத்தில் முருகனுக்கு தேனும் தினையும் படைக்கிறோம் என்று கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று(நவ. 19) தொடக்கிவைத்தார்.
மேலும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 21வது தவணையும் பிரதமர் விடுவித்தார்.
அதாவது, நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கான ரூ. 18,000 கோடி உதவித்தொகையை கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நாட்டின் சிறுவிவசாயிகளுக்கு ரூ. 4 லட்சம் கோடி தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாகிவிட்டது. இந்தத் தொகை விவசாயிகளுக்கு பல்வேறு வகையில் பயன்பெறும்.
தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் தினையும் படைக்கிறோம். தமிழ்நாட்டில் கம்பு, சாமை மற்றும் கேரளத்தில் கேழ்வரகு ஆகியவை பல தலைமுறைகளாக நமது உணவு பழக்கத்தில் ஒன்றிணைந்துள்ளது.
இயற்கை விவசாயத்தில் சிறுதானியங்கள் பயிர் செய்வதை இணைக்க வேண்டும். கேரளம், கர்நாடகத்தில் பல்லடுக்கு வேளாண்மையை நம்மால் காண முடியும். ஒரே வயலில் தென்னை, பாக்கு, பழ மரங்கள் ஆகியவை இருக்கும். இவைகளுக்கு இடையே, கீழே ஊடுபயிராக மிளகு போன்ற மசாலா பொருள்கள் இருக்கும். இதுதான் இயற்கை விவசாயத்தின் அடிப்படைக் கோட்பாடு.
இந்த மாதிரியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இதன்மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்று மாநில அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றைப் பயிருக்குப் பதிலாக பல்வகை பயிர் வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது” என்றார்.
இதையும் படிக்க: ஒரே நாளில் ரூ.1,600 விலை உயர்ந்த தங்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.