

கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வங்கிக் கணக்கு வைத்திருந்தால், அதனை மிகவும் பாதுகாப்பாகக் கையாளவும், அதன் விவரங்களை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், உடன் பயிலும் நண்பர்களாக இருந்தாலும், அவர்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காரணம், கல்லூரி மாணவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி சிலர் சைபர் மோசடிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வு கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.
முதற்கட்ட விசாரணையில், மோசடியாளர்கள் மாணவ, மாணவிகளுக்கு பணம் கொடுத்து வங்கிக் கணக்குத் தொடங்க வைப்பதாகவும், அந்த வங்கிக் கணக்கை மோசடியாளர்களே பயன்படுத்துவதும், இவ்வாறு சிக்கும் மாணவர்கள் பெயர்களில் சிம் கார்டுகள் பெற்று, அவையும் மோசடி கும்பலால் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
அதாவது, புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று ஆன்லைன் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த கணேஷ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு வங்கிக் கணக்குக்கு தலா ரூ.2,500 தருவதாக கூறியதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு ஹரிஷ் என்ற கல்லூரி மாணவரிடம் வங்கிக் கணக்கு தொடங்கியதோடு, சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த வங்கிக் கணக்குக்கு, கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.2500 வழங்கப்பட்டுள்ளதும், இந்த வங்கிக் கணக்குகளில் ரூ.8 கோடி வரை சைபர் குற்றங்கள் மூலம் பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதும், இதிலிருந்து ஏடிஎம்கள் மூலம் ரூ.10 லட்சம் வரை மாணவர்களே பணம் எடுத்துக் கொடுத்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதுபோல, மாணவர்களின் வங்கிக் கணக்குகளை வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யும் மோசடி கும்பலும் இயங்கி வருகிறது. இவர்களுக்கு வங்கிக் கணக்குத் தொடங்கி கொடுத்தாலோ அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்தாலும் அது குற்றமாகும். மோசடி கும்பல்கள், பணம் கைம்மாறிய வங்கிக் கணக்கை விசாரிக்கும்போது இந்த மாணவர்கள் தான் பிடிபடுவார்கள், தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் இந்த நூதன மோசடியை மேற்கொள்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.