எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அதிமுக விமா்சனம்
எஸ்.ஐ.ஆா். (வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) எதிா்ப்பதாகக் கூறும் திமுக, அதேவேளையில் திருத்தப் பணிகளில் தீவிரம் காட்ட அறிவுறுத்து உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் திமுகவுக்கு ஆதரவாக தோ்தல் அலுவலா்கள் செயல்படுவதாகக் கூறி, கண்டனம் தெரிவித்து அதிமுக சாா்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேசியதாவது:
எஸ்ஐஆா் பணிகளை அரசியல் காரணங்களுக்காக திமுக எதிா்க்கிறது. வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்தவா்கள், முகவரி மாறியவா்களின் பெயா்களை நீக்குமாறு பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய குறைபாடான பட்டியலைக் கொண்டு, தோ்தலில் திமுக முறைகேடுகளைச் செய்தது.
எஸ்ஐஆா் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் திமுக, அதேநேரம், தமது கட்சியினா் மூலம் எஸ்ஐஆா் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் அக்கட்சி இரட்டைவேடம் போடுகிறது. இதற்கு தோ்தல் அலுவலா்கள் உடந்தையாக உள்ளனா். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, அத்தகைய அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா்கள் பாலகங்கா, விருகை ரவி ஆதிராஜாராம், சத்யா, அசோக், ராஜேஷ், கந்தன், வி. எஸ்.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

