கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ: நயினார் நாகேந்திரன்

கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ ரயில் திட்டம் வரும் என்று நயினார் நாகேந்திரன் உறுதி.
நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி: தமிழகம் தற்கொலை தலைநகரமாகிறது என்றும், மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க சதி செய்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் அரசின் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார் நயினார் நாகேந்திரன்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உடன், இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மெட்ரோ ரயில் திட்டம் குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக நடந்த இந்தச் சந்திப்பில், அவர் சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், "தமிழகத்தில் நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றன. போதைப்பொருள் கலாசாரம் மாநிலத்தின் எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டும் நான்கு கொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது, குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது," என்று குற்றம் சாட்டினார்.

பிறகு, ரமணா பட நாயகன் விஜயகாந்த் பாணியில், காவல்துறை குறித்த புள்ளிவிவரங்களையும் அடுக்கினார். தமிழகத்தில் இதுவரை 14 தாக்குதல் சம்பவங்கள் காவல்துறை மீது நடைபெற்றுள்ளன. பாலியல் குற்றங்கள் 53 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 18,200 பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. கற்பழிப்புச் சம்பவங்கள் கடந்த ஆட்சியை விட 17 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

தற்கொலை முயற்சிகள் இந்தியாவில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளது. தமிழகம் தற்கொலையின் தலைநகரமாகத் திகழ்ந்து வருகிறது என்றார்.

செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சமாக, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

திருநெல்வேலிக்கும் மெட்ரோ ரயில் கொண்டு வருவேன் எனத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஏன் தற்போது இது குறித்துத் தெரிவிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோவுக்கு இரண்டு மற்றும் மூன்று நிமிட வித்தியாசம் இருப்பதாகத் தமிழக அரசே ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்திற்கான அறிக்கையை மத்திய அரசுக்குத் தமிழக அரசு தவறாக வழங்கி உள்ளது என்று நான் பகிரங்கமாகச் சொல்வேன்.

மத்திய அரசு, மாநில அரசுக்கு 14ஆம் தேதியன்று அனுப்பிய கடிதத்தில், அந்த அறிக்கையைத் திருப்பி (DPR - Detailed Project Report) அனுப்பி இருக்கிறது. முதல்வர் ஏன் 15-ம் தேதி இந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதவில்லை? மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்?" என்று ஆவேசமாகப் பேசினார்.

மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. திட்ட அறிக்கை மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோயம்புத்தூர், மதுரைக்கு வந்துவிடும் என்று உறுதியாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com