

தவெக பிரசாரம் செய்வதற்கு 4 வாரங்களுக்கு முன்னரே காவல்துறையிடம் அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என தவெகவினருக்கு சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கரூர் நெரிசல் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய் தனது பிரசாரத்தை நிறுத்தியுள்ள நிலையில், வருகிற டிச. 4 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச. 4 ஆம் தேதி சேலத்தில் இருந்து மீண்டும் விஜய் பிரசாரத்தைத் தொடங்க சேலம் மாநகர காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் டிச. 4 அன்று சேலத்தில் தவெக பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் தவெகவினருக்கு சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்களுடன் ஒரு விளக்க கடிதத்தை அளித்துள்ளது.
அதன்படி, டிச. 4 ஆம் தேதி சேலம் மாவட்ட காவல்துறையினர் திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீப திருவிழாவிற்கான பாதுகாப்புக்குச் செல்லவிருப்பதால் டிச. 5 ஆம் தேதி தவெக பிரசாரத்திற்கு அனுமதி அளிக்க முடியாது.
மேலும் பிரசாரம் நடத்துவதற்கு 4 வாரங்களுக்கு முன்னரே அனுமதி கடிதம் அளிக்க வேண்டும். அனுமதி கோரி முன்கூட்டியே மனு அளித்தால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். பிரசாரம் தொடர்பான நீதிமன்ற அறிவுறுத்தல்களை தவெக பின்பற்ற வேண்டும்.
பிரசாரத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள், வெளிமாவட்டத்தில் இருந்து தோராயமாக எத்தனை பேர் வருவார்கள் போன்ற தகவல்களும் குறிப்பிட வேண்டும். குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடிதத்தில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதையடுத்து கட்சி தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் இதுகுறித்து ஆலோசித்து காவல்துறைக்கு பதிலளிக்கவிருப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.