

நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய பாஜக அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும்,
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய பாஜக அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் 23.11.2025 அன்று தஞ்சாவூரிலும், 24.11.2025 அன்று திருவாரூரிலும் காலை 10 மணியளவில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிததுள்ளது
முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி, 'கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய மத்திய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?' என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் நிராகரிப்பைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.