

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே, இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் ஆறு பேர் பலியானதாகவும் 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 11 மணியளவில், பல்லடத்திலிருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், ராஜபாளையத்திலிருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
இந்த விபத்தின்போது, வாகனத்துக்குக் கீழே மூன்று பயணிகள் சிக்கியிருந்ததாகவும் அவர்களை பொதுமக்கள் மீட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது விபத்துகள் நேரிடுவதாகவும், இன்று நேர்ந்த விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் இறந்தவர்கன் அடையாளம் தெரியவரவில்லை.
தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் செல்லக் கூடிய தனியார் பேருந்துகள் போட்டிப் போட்டுக் கொண்டு செல்வதாகவும், அதன் காரணமாக அதிவேகமாக இயக்கப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறியிருக்கிறார்கள்.
விபத்து நடந்த பகுதி, இரண்டு பேருந்துகள் செல்லும் வகையில் விரிவாகவே உள்ளது. வெள்ளைக் கோட்டுக்கு பிறகும் இட வசதியும், ஒரு பக்கம் மக்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் பேருந்துகள் வேகமாக இயக்கப்பட்டிருப்பதும், போட்டிப் போட்டுக் கொண்டு செல்ல முயன்றிருக்கலாம். இதுவே இந்த விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், இப்பகுதியில் சாலை விரிவாக இருந்தாலும் சென்டர் மீடியன் இல்லாததால் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இரண்டு பேருந்துகளிலும் முழு அளவில் எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கிறது என்பதால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நேரிட்டிருக்கும் அபாயமும் இருந்துள்ளது. தற்போது இரு வாகனங்களின் எரிபொருள்களையும் பத்திரமாக வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 25க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தென்காசி மருத்துவமனைக்கு காயமடைந்தவர்களைக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. தென்காசி அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.