

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட 5 பேர் புதன்கிழமை நேரில் ஆஜராகினர்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஐ அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாள்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, கரூர் டெக்ஸ் தொழில் அதிபர் செந்தில்குமார், நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுலக்கண்ணன் மற்றும் ஓடுவந்தூர் தேசிய முற்போக்கு திராவிட கழக ஒன்றிய இணைச் செயலாளர் நவலடி ஆகியோரிடம் புதன்கிழமை காலை முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே நெரிசல் சம்பவத்தின் போது அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், காவலர்கள், நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.