

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மற்றும் வழக்குரைஞர்கள் மோதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குரைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
இதுதொடர்பான வழக்கில் தொடர்புடைய வழக்குரைஞர்களைக் கைது செய்தபோது, காவல்துறையினருக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடந்த இந்த மோதலில், வழக்குரைஞர்கள், நீதிபதிகள், செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, வழக்குரைஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 28 வழக்குரைஞர்களும், 4 காவல்துறை அதிகாரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்குரைஞர்கள் சார்ப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகன கிருஷ்ணன், தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். அப்போது, இந்த மோதல் சம்பவத்தின்போது நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தானும் ஒரு வழக்குரைஞராக இருந்து நேரில் பார்த்ததாக நீதிபதி குறிப்பிட்டார்.
பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் மனுதாரர்கள் அனைவர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி நிர்மல் குமார் இன்று தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.