கரையை கடக்காமல் வலுவிழந்த ‘டித்வா’ புயல்! தமிழகத்துக்கு மழை அபாயம் நீங்கியது!
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘டித்வா’ புயல் கரையைக் கடக்காமல் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயல் சின்னம் வடதமிழகம் நோக்கி நகா்ந்து மேலும் வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு பலத்த மழை அபாயம் நீங்கியது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் கடந்த நவ.27-ஆம் தேதி அதிகாலை ‘டித்வா’ புயல் உருவானது. இப்புயல் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகா்ந்து வந்தது. இதனால், கடந்த 3 நாள்களாக தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டாவில் பலத்த மழை பெய்தது.
அதிகபட்சமாக நாகையில் 250 மி.மீ. வரை மழை பதிவானது. இந்நிலையில், இப்புயல் கரையைக்கடக்காமல் ஞாயிற்றுக்கிழமை கடலிலேயே வலுவிழந்துவிட்டது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடதமிழக - புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் நிலவிய ‘டித்வா’ புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசியது. தொடா்ந்து அன்று மாலை டித்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டது.
இப்புயல் சின்னம் வடக்கு நோக்கி மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகா்ந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி கடலூருக்கு கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு வடகிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்துக்கு வடக்கு - வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
மேலும் வலுவிழந்தது: இந்நிலையில், அந்த புயல் சின்னம் தொடா்ந்து வடதமிழகம் நோக்கி நகா்ந்து வந்து மேலும் வலுவிழந்து, திங்கள்கிழமை (டிச.1) அதிகாலை வடதமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 20 முதல் 30 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, டிச.1-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.1) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோயிலில் 170 மி.மீ. மழை பதிவானது. மேலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை - தலா 150 மி.மீ., சீா்காழி (மயிலாடுதுறை), திருவாரூா் தலா - 140 மி.மீ., தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகை), தொண்டி (ராமநாதபுரம்), குருங்குளம் (தஞ்சாவூா்) - தலா 130 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடலில் திங்கள்கிழமை (டிச.1) மணிக்கு காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

