
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட நீண்ட கால வானிலை கணிப்பின் அடிப்படையில் வருகின்ற வட கிழக்கு பருவ மழை காலத்தில் (அக்டோபர் - டிசம்பர் 2025) தமிழகத்தில் தென்கோடி பகுதிகளைத் தவிர்த்து அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக இயல்பு (440 மி.மீ) இயல்பிலிருந்து சற்று அதிகமான (சுமார் 500 மி.மீ) மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
தமிழக தென்கோடி பகுதிகளில் பொதுவாக வடகிழக்கு பருவமழை இயல்பு இயல்பிலிருந்து சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் அதிக மழை: அக்டோபரில் வழக்கத்தைவிட 15 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கும். வடக்கு, மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் சராசரிக்கும் குறைவான வெப்பநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மாறாக ஜம்மு-காஷ்மீர், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், கிழக்கு உத்தர பிரதேசம், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மிருத்யுஞ்ஜய மொஹபாத்ரா தெரிவித்தார்.
இதையும் படிக்க: மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.