
தவெக விஜய்க்கும், திமுகவுக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திதினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் பேசுகையில், “மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று. காமராஜரின் நினைவு நாள் இன்று. இந்த இரு பெரும் தலைவர்களும் மதுவுக்கு எதிரானவர்கள். அவர்களது வழியில் பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழப்புக்கு மது அருந்தியவர்களும் காரணம்.
அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, அடுத்தவர்கள் மீது பழி போடுவதற்காக, குற்ற உணர்வு இல்லாமல், கொஞ்சம்கூட கவலை இல்லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி போடுவதற்காக விஜய் முயற்சிக்கிறார்.
விஜய் எவ்வளவு ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருக்கிறார் அல்லது ஆபத்தானவர்களிடம் சிக்கி இருக்கிறார் என்பது கவலை அளிக்கிறது.
இதுபோன்ற சக்திகளிடம் தமிழக மக்கள் சிக்கிக் கொண்டால் என்ன ஆகுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகிறது. கரூர் உயிரிழப்பில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, ஏன் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை?
தனது கொள்கை எதிரி பாஜக என்று, விஜய் கூறி வந்த நிலையில், அவரை பாதுகாக்க பாஜக முன்வருகிறது. இதிலிருந்து விஜய்யின் சாயம் வெளுத்துப் போய்விட்டது.
நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி விஜய்யுடன் சேர்ந்தது எதற்காக? பாஜக மதவாத கட்சி என்று அவர் என்றைக்காவது சொல்லி இருக்கிறாரா? எதற்காக அவர் தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டு வர வேண்டும். அவர் அவ்வளவு பெரிய தியாகியா என்ன?
ரஜினியை தனியாக கட்சி தொடங்குவதற்கு ஆலோசனை கொடுத்தது ஆர்எஸ்எஸ் அமைப்பு. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கக்கூடிய விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய் எப்போதும் இணைய மாட்டார். அவரது நோக்கம் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளையும் சிறுபான்மையினருடைய வாக்குகளையும் பிரிக்க வேண்டும் என்பதுதான். பாஜக ஆர்எஸ்எஸ் தூண்டுதலின் பெயரில் விஜய் செயல்படுகிறார்.
தவெக தலைவர் விஜய் மீது வழக்கு செய்ய காவல் துறையினர் தயங்குவது ஏன்? தவெக விஜய்க்கும், திமுகவுக்கும் ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது.
இது விபத்து என்றால் மற்றவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை காவல் துறை திரும்ப பெற வேண்டும்” என அவர் பேசினார்.
இதையும் படிக்க: ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.