விஜய் மீது வழக்குப்பதிய அரசுக்கு அச்சமா? திருமாவளவன்

தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்...
தொல். திருமாவளவன் (கோப்புப்படம்)
தொல். திருமாவளவன் (கோப்புப்படம்)DNS
Published on
Updated on
2 min read

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறதா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விஜய்யை பாஜக இயக்குவதாகவும் அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கரூர் பிரசாரக் கூட்டநெரிசல் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:

”தமிழ்நாடு அரசு முறையாக இயங்கவில்லை எனக் குற்றம்சாட்ட முயற்சிப்பது, 41 பேர் பலியானது பிரச்னை இல்லை, இதனை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வதில்தான் விஜய் குறியாக இருக்கிறார் என்பதை காண அதிர்ச்சியாக இருக்கிறது.

அதற்காக துளியும் வருத்தப்படுவதாகவும், களங்குவதாகவும், குற்ற உணர்வு இருப்பதாகவும் தெரியவில்லை. கொஞ்சம்கூட கவலைப்படாமல், ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவது அவர் எவ்வளவு ஆபத்தானவர் அல்லது ஆபத்தானவர்களின் கைகளில் சிக்கியுள்ளார் என்பது கவலை அளிக்கிறது. இதுபோன்ற சக்திகளிடம் தமிழக மக்கள் சிக்கிக் கொண்டால், எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு இருக்கும் முகாந்திரம் விஜய்க்கு இல்லையா? செயல் திட்டங்களை வகுக்கும் அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்? தமிழக அரசு, தமிழக காவல்துறை அச்சப்படுகிறதா? காவல்துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல.

இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்கள், அலட்சியமானவர்கள், வேண்டுமென்றே தாமதமாக வந்தவர்கள் என்ற வரிசையில் விஜய்யும்தான் வருகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என்ன அச்சம்?

கொள்கை எதிரி எனக் கூறிய பிறகு, பாஜக முட்டுக்கொடுப்பது ஏன்? கொள்கை எதிரி என்று பாஜக சொல்லிக் கொடுத்ததை விஜய் சொல்கிறார்? இதுபோன்று தமிழகத்தில் பலரை இறக்கிவிட்டுள்ளனர். விசிக இருக்கும்வரை தமிழகத்தில் இதுபோன்ற சூது, சூழ்ச்சிகளை செய்ய முடியாது.

சுயமாக செய்திருந்தால் இதுபோன்ற தவறுகளை விஜய் செய்திருக்க மாட்டார். நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்டோர் பாஜகவால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது. தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.

விஜய் பேசியக் கூடிய அரசியல் என்பது கருத்தியல் சார்ந்தது கிடையாது. திமுக வெறுப்பு மட்டுமே அவரது அரசியல். அவரின் உரை உணர்ச்சியையும் ஆத்திரத்தையும் தூண்டக் கூடியதாக இருக்கிறது. அஞ்சலை அம்மாள், காமராஜர், அண்ணா, அம்பேத்கர் போன்றவர்களைப் பற்றி அவர் பேசி இருக்கிறாரா?

இயக்குநராக பாஜக கூறுவதை விஜய் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு பகுதியினர் அவரின் பின்னால் போவதால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. திமுகவை பலவீனப்படுத்த முடியுமே தவிர ஆட்சியைப் பிடிக்க முடியாது.

குறைந்தபட்ச இரக்க உணர்வே இல்லையென்றால் எப்படி? சிதம்பர விவகாரத்தில் நான் கதறிகதறி அழுதுள்ளேன். பல நாள்கள் தூக்கத்தை இழந்துள்ளேன். இறந்தவர்களை தூக்கிச் சென்றுகொண்டிருப்பதை பார்த்த பிறகு பாடிக் கொண்டுள்ளார் விஜய். தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Is the government afraid of filing a case against Vijay? Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com