
சென்னையில் வியாழக்கிழமை இரவு பரவலாக பலத்த மழை பெய்திருக்கும் நிலையில், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை காலை முதலே வெப்பம் அதிகரிக்காமல் குளிர்ந்த கால நிலை நிலவி வந்தது.
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 26 மி.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 17 மி.மீ. மழையும் பதிவாகியிருக்கிறது.
விடைபெற்றது தென்மேற்குப் பருவமழை
செப்டம்பர் மாதத்துடன் தென்மேற்குப் பருவமழை விடைபெற்றுவிட்டது. அக்டோபர் மாதம் முதல் பெய்யும் மழைகள் அனைத்தும் வடகிழக்குப் பருவமழைக் கணக்கில்தான் வரும் என்பதால், சென்னைக்கு, வடகிழக்குப் பருவமழையும் தனது கணக்கை வியாழக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.
கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளைப் போலவே, சென்னைக்கு மிகச் சிறந்த தென்மேற்குப் பருவமழைக் காலமாக 2025ம் அமைந்திருந்தது.
நுங்கம்பாக்கத்துக்கு தென்மேற்குப் பருவமழை அதிக மழை ‘கொடுத்த ஆண்டுகளில் 2025 ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
சென்னையில் கனமழை
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் சென்னையில் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூரிலும் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கனமழை பெய்யும் மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்றும் மேலும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 5ஆம் தேதி ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.