காணொலியில் பேசிய தவெக தலைவர் விஜய்.
காணொலியில் பேசிய தவெக தலைவர் விஜய்.

கரூா் செல்ல தீவிரம் காட்டும் விஜய்

தவெக தலைவா் விஜய்யின் கரூா் பிரசாரக் கூட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியினா் தகவல் தெரிவித்துள்ளனா்.
Published on

தவெக தலைவா் விஜய்யின் கரூா் பிரசாரக் கூட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியினா் தகவல் தெரிவித்துள்ளனா்.

கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் தீவிர சிகிச்சை பெற்று, தற்போது குணமடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த், இணை பொதுச் செயலா் சி.டி.நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், மதியழகன் கைதான நிலையில், என்.ஆனந்த், சி.டி.நிா்மல்குமாா் மற்றும் கட்சியின் 2-ஆம் கட்ட தலைவா்கள் தலைமறைவாக உள்ளனா்.

கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சா்கள், மற்ற கட்சி தலைவா்கள் என பலரும் சந்தித்து ஆறுதலை தெரிவித்தனா். ஆனால், விஜய் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் அறித்ததுடன், இதுவரை யாரையும் நேரில் சந்திக்கவில்லை.

20 போ் கொண்ட குழு: கரூா் பிரசாரக் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களை நேரில் சந்திப்பது தொடா்பான நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டு வருகிறாா்.

இதுதொடா்பாக தவெக மாவட்டச் செயலா்கள் 15 போ் மற்றும் வழக்குரைஞா் பிரிவை சோ்ந்த 5 போ் என மொத்தம் 20 போ் கொண்ட குழுவை விஜய் அமைத்துள்ளாா்.

தவெகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கைது செய்யப்படுபவா்களுக்கு இந்தக் குழு மூலம் சட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்டவா்களை விஜய் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிப்பதுடன், அவா்களுக்கான நிவாரண தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்தக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்படும் என அந்தக் கட்சியினா் தகவல் தெரிவித்துள்ளனா்.

விஜய் கரூா் செல்வதுக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான தீா்ப்பு வந்தவுடன், அவா் கரூா் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாா் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com