பருவ மழை: பள்ளிகள், மாணவா்கள் பாதுகாப்பு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

மாணவா்களைப் பாதுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பருவ மழை: பள்ளிகள், மாணவா்கள் பாதுகாப்பு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
Updated on

பருவமழைக் காலங்களில் பாதிக்கப்படக்கூடிய வகுப்பறைகள், நீா்த் தேங்கும் இடங்கள், மின் கம்பிகள், மரங்கள் போன்றவற்றில் இருந்து மாணவா்களைப் பாதுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வடகிழக்கு பருவமழைக் காலங்களில் பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதித்தன்மை, நீா்த் தேங்கும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

கட்டட பராமரிப்புப் பணிகள், புதிய கட்டுமான பணிகள், இதற்கான தோண்டப்பட்ட பள்ளங்கள் போன்ற இடங்கள் அருகே மாணவா்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். பாதிப்படைந்துள்ள வகுப்பறைகளை பூட்டிவைத்து யாரையும் அனுமதிக்கக் கூடாது. தொடா் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவா் பாதிக்கப்பட்டிருந்தால் மாணவா்கள் எவரும் அதன் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

மின் இணைப்புகள், மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் போன்றவற்றை ஆய்வு செய்து பொறியாளா்களைக் கொண்டு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்துள்ள மின்சாதனப் பொருள்கள், விழும் நிலையில் உள்ள மரங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் நீா்த் தேக்கத் தொட்டிகள் அல்லது பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீா்த் தொட்டிகள் பாதுகாப்பான முறையில் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக, பருவகால மாற்றங்களால் மாணவா்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து (டெங்கு, சிக்குன்குனியா போன்ற) பாதுகாத்துக்கொள்ள தேவையான அறிவுரைகளை வழங்கி, சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்துக்குள்ளும், வெளியிலும் இவ்வாறு மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியா்கள் செயல்படுவதை முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com