தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் காலமானார்!

தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் மறைவு பற்றி...
Historian and archaeologist Natana. Kasinathan
தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன்X
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநரும் வரலாற்று ஆய்வாளருமான நடன. காசிநாதன் காலமானார்.

தமிழ் பிராமி கல்வெட்டுகள், தொல்லியல், வரலாறு, அகழாய்வு, நாணயவியல், செப்பேடுகள் எனப் பன்முகத் தன்மையில் ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணற்ற நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தன்னுடைய ஆராய்ச்சிகளின் மூலமாக தமிழர் நாகரிகம், தமிழ்ச் சமூகம் குறித்த பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர் நடன. காசிநாதன்.

நடன. காசிநாதன், 1940 நவம்பர் 1 ஆம் தேதி விருத்தாசலம் வட்டம் தொப்பளிக்குப்பத்தில் பிறந்தார். பெற்றோர் நடனசபாபதி - ருக்குமணி அம்மையார். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தவர். சிதம்பரம் வட்டம் தே. புதுப்பேட்டையில் வளர்ந்தார்.

1963-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வரலாறு இளங்கலைப் பட்டமும் 1965-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1967-ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராய்ப் பணியில் சேர்ந்தார். 1981-ல் துணை இயக்குநராகவும் 1989-ல் துறை இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடந்த கருத்தரங்குகள் பலவற்றிலும் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் படித்தவர். 'காசுநாதன்', 'கல்வெட்டுச் செம்மல்', 'தொல்லியல் அறிஞர்’, ‘தமிழ்ச்செம்மல்' எனப் பல பட்டங்களைப் பெற்றவர்.

தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் ஆய்வுலகம் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தனது சேகரிப்புகளான நூல்கள், இதழ்கள் உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்ட ஆவணங்களைச் சில மாதங்களுக்கு முன்பு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தை நிறுவியவர். தமிழ்நாட்டில் முதன்முதலில் இவரது தலைமையின் கீழ் பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

பணி ஓய்வுக்குப் பிறகு, 'தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்' என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கிக் கருத்தரங்குகளை நடத்தி வந்தார்.

சென்னை சேலையூரில் உள்ள தனது வீட்டில் இன்று(அக். 6) காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Historian and archaeologist Natana Kasinathan passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com