நடன. காசிநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்...
Natana Kasinathan
நடன. காசிநாதன்X
Published on
Updated on
1 min read

தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிராமி கல்வெட்டுகள், தொல்லியல், அகழாய்வு, நாணயவியல், செப்பேடுகள் எனப் பல ஆய்வுகளை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ள தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநரும் வரலாற்று ஆய்வாளருமான நடன. காசிநாதன் இன்று(அக். 6) காலமானார்.

தன்னுடைய ஆராய்ச்சிகளின் மூலமாக தமிழர் நாகரிகம், தமிழ்ச் சமூகம் குறித்த பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர். தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தை நிறுவியவர். தமிழ்நாட்டில் முதன்முதலில் இவரது தலைமையின் கீழ் பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,

"தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

நடன. காசிநாதன் பல்வேறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள். பழமையான சிற்பங்கள். நடுகற்களைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். தமிழரின் தொன்மையை நிலைநாட்ட நமது திராவிட மாடல் அரசு ஆற்றி வரும் பணிகளுக்கு முன்னோடியாகப் பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.

வட்டெழுத்துக் கல்வெட்டுகளைச் சரளமாகப் படிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற நடன. காசிநாதன் தமிழ்நாடெங்கும் வரலாற்றுக் கருத்தரங்குகளையும். கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளையும் நடத்திப் பல இளைஞர்களும் இத்துறையில் ஆர்வம் பெற உழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லெழுத்துக் கலை. சோழர் செப்பேடுகள், தமிழர் காசு இயல், இராசராசேச்சுரம் . Under Sea Exploration off the shore of Poompuhar, The Metropolis of the Medieval Cholas முதலிய ஏராளமான ஆங்கில நூல்களையும் எழுதியதோடு, பல நூல்களைப் பதிப்பித்து, தொல்லியல் ஆய்வுத் துறைக்கு மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியவர் நடன. காசிநாதன்.

இவரது அளப்பரிய பங்களிப்புகளுக்கு அங்கீகாரமாகத் தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது, சிறந்த நூல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் ஆய்வுச் செம்மல் நடன. காசிநாதன்.

பணி ஓய்வுக்குப் பின்னும் தீவிரமாகத் தன் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்த அறிஞரான நடன. காசிநாதனின் மறைவு தொல்லியல் துறைக்குப் பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார். அறிஞர் பெருமக்கள். மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Chief Minister M.K. Stalin has expressed condolences on the death of archaeologist Natana. Kasinathan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com