
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து அனுமதி பெற்ற பிறகு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சில கருத்துகளை நீக்கி உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெயமால்யா பாக்சி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”வழக்கு விசாரணையில் இருக்கும்போது குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்கக் கூடாது எனக் கூறமுடியாது” என வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களை கலைக்க நேரிடும். அவர் அமைச்சராக இல்லாததை கருத்தில் கொண்டே ஜாமீன் வழங்கப்பட்டது. அமைச்சாராவதை நீதிமன்றம் தடுக்கவில்லை. ஆனால், அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய கபில் சிபல், “சாட்சியங்களை கலைக்க முயற்சித்ததாக எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை, இன்னும் வழக்கின் விசாரணையே தொடங்கவில்லை” என வாதிட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பில் வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேண்டுமென்றே வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த பல்வேறு மனுக்களை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஏன் தில்லி நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அவ்வாறு செய்தால் மாநில நீதித்துறையின் மீது தவறான கருத்துக்கு வழிவகுக்கும் என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்வி தெரிவித்தார்.
தில்லிக்கு மாற்றுவது தொடர்பாக கருத்து மட்டுமே தெரிவித்ததாக கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றால் தனி மனுவாக தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம் எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.