
புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, நீதிமன்ற அறைக்குள், வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயற்சி நடந்திருக்கிறது. நல்வாய்ப்பாக உச்ச நீதிமன்ற காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
புது தில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் வழக்கம் போல விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது, கடவுள் விஷ்ணுவின் சிலை ஒன்றின் தலை, சமூக விரோதக் கும்பலால் உடைக்கப்பட்டிருக்கிறது. அதனை சரி செய்யுமாறு உத்தரவிடக் கோரி நீதிமன்ற அறையில் வழக்குரைஞர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதனைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இதற்கெல்லாம் எப்படி உத்தரவிட முடியும்? நீங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பது போன்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
நீதிபதியின் கருத்தைக் கேட்ட வழக்குரைஞர், சநாதனத்துக்கு இழுக்கு ஏற்படுமாயின், அதனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூச்சலிட்டபடி, காலில் இருந்து காலணியைக் கழற்றியிருக்கிறார். அதனை அவர் வீசுவதற்கு முற்படுவதற்கு முன்பே, நீதிமன்றக் காவலர்கள், அவரைத் தடுத்து அவரிடமிருந்து காலணியைப் பறித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற விசாரணை அறையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவத்தில் ஈடுபட முயன்ற வழக்குரைஞரை, நீதிமன்ற பாதுகாவலர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்துச் சென்றது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பவத்துக்குப் பிறகு வழக்கம் போல தலைமை நீதிபதி தனது பணியை தொடர்ந்தார். இதனால், எந்த வழக்கும் விசாரணையும் பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க... சீனா தங்கம் வாங்கிக் குவிப்பது ஏன்? விரிவான பார்வை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.