சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் பருவ பாடநூல்களை மாணவிகளிடம் திங்கள்கிழமை வழங்கிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன்.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் பருவ பாடநூல்களை மாணவிகளிடம் திங்கள்கிழமை வழங்கிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன்.

விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: இரண்டாம் பருவ பாடநூல்கள் விநியோகம்

காலாண்டுத் தோ்வு விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
Published on

சென்னை: காலாண்டுத் தோ்வு விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியாா் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான பாடநூல்கள் முதல் நாளிலேயே விநியோகிக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கி செப். 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மாணவா்களுக்கு செப். 27 முதல் அக்.5-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை நாள்களில் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மை மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வளாகங்களில் மழைநீா் தேங்குவதற்கு வாய்ப்புள்ள பகுதிகள் சமன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டன. இதேபோல், மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தோ்வு விடைத்தாள்களை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வழங்கினா்.

பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அங்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்துக்கான விலையில்லா பாடநூல்களை அவா் வழங்கினாா்.

இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இரண்டாம் பருவத்துக்கான பாடநூல்களை உடனடி வழங்கவும், பருவ மழையையொட்டி பள்ளி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com