
சென்னை: கோவை - அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலத்தை அக்டோபா் 9-ஆம் தேதி திறந்துவைக்கவிருக்கும் நிலையில், அந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை - அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,791.22 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று நிறைவுபெற்றுள்ளது. இந்தப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 9 -ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை மேம்பாலத்தை (AvinashiRoadFlyover) நமது திராவிட மாடல் (#DravidianModel) அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி. நாயுடு (GDNaidu) அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் அவிநாசி சாலை வழியாக சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி விரைந்து செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க... சாலை பள்ளத்தால் கார் சேதமடைந்தால் அரசிடம் நஷ்ட ஈடு கோரலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.