
வரும் 2032-க்குள், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (அக். 7) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “ஏரோ-டெஃப்-கான் 25” என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
”வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான - ஏரோ-டெஃப்-கான் 25 என்ற இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் முதன்முறையாக நாம் தொடங்கி வைத்திருக்கிறோம்.
2024–25-ஆம் ஆண்டில், 14.6 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிலும் நாம்தான் முதலிடம்!
45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபி-இல் உற்பத்தி துறை 20 விழுக்காடு பங்கு வகிக்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தில், தமிழ்நாடு முன்னணி 50 இடங்களில் இருக்கிறது.
இந்தியாவிலேயே 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இரட்டை இலக்கத்தை(double digit) எட்டிப் பிடித்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். எதைப் செய்தாலும், ஆல்ரவுண்டாக, பெஸ்ட்டாக செய்வதால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது. இதில், மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது பாதுகாப்புத் தொழில்துறை!
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத்தில் அமைந்திருக்கும் நகரங்களில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது.
கோவை வரப்பட்டியில், 360 ஏக்கரில் ‘பாதுகாப்பு தொழிற்துறைப் பூங்கா’ அமைக்கப்பட்டு வருகிறது.
விமான பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ள நேரடியாக ஓடுதள அணுகு வசதியுடன் கூடிய வான்வெளிப் பூங்கா, சூலூரில் 200 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் 90-க்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள் இயந்திரவியல் உற்பத்தித் துறையில் தங்கள் தொழில்களை பெருக்க TREAT அமைப்பு உதவுகிறது.
சென்னைக்கு அருகில் வல்லம் வடகாலில் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை வான்வெளி நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டு வரும் ஏரோ-ஹப் என்ற திட்டம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.
தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியதில் இருந்து, இதுவரை 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இதில், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
2032-க்குள், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த வழித்தடத்தில் இருக்கும், ஒவ்வொரு நகரமும் தனித்துவமான மையங்களாக விளங்குகிறது.
சென்னை என்பது ஆராய்ச்சி மற்றும் கடற்படை அமைப்புகளுக்கான மையமாகவும், கோயம்புத்தூர் – நுண்பொறியியல் திறனுக்கான மையமாகவும், ஓசூர் – வான்வெளி மற்றும் மின்னணு தொழில்நுட்ப மையமாகவும், சேலம் – உயர் தொழில்நுட்பப் பொருட்கள் மையமாகவும், திருச்சி – கனரக இயந்திர உற்பத்தி மையமாகவும் இருக்கிறது. இவை எல்லாம் ஒன்றாக சேர்த்து, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீட்டிற்கு உகந்த இடமாக விளங்குவதைக் காட்டுகிறது.
தூத்துக்குடியில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை வைத்து விண்வெளித் துறையில் பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவான திட்டப்பாதையை நாங்கள் வகுத்திருக்கிறோம். இந்திய விண்வெளித் துறை வளர்ச்சிக்கு - தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். சென்னை காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், சூலூர் மற்றும் வல்லம் வடகால் வான்வெளி பூங்காக்கள் - தூத்துக்குடியில் அமையவுள்ள விண்வெளிப் பூங்கா ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கும் உறுதுணையாக இருக்கிறது” என்றார்.
இதையும் படிக்க: செய்யறிவு பயன்பாட்டால் மின் தட்டுப்பாடு! கட்டணம் உயரும் அபாயம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.