
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று(அக். 6) விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் தனது காலணியை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை நீதிமன்ற காவலர்கள் வெளியேற்றியதும், 'இந்த சம்பவம் என்னை எதுவும் பாதிக்காது' என்று கூறி வழக்கு விசாரணையை நீதிபதி தொடர்ந்தார்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ராகேஷ் கிஷோரிடம் விசாரணை நடத்திய பின்னர் போலீசார் விடுவித்தனர்.
மேலும் வழக்குரைஞா் ராகேஷ் கிஷோரின் உரிமத்தை ரத்து செய்து இந்திய வழக்குரைஞா் கவுன்சில் (இந்திய பாா் கவுன்சில்) உடனடி நடவடிக்கை மேற்கொண்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் தலைமை நீதிபதி நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எந்தவொரு வன்முறையும் குறிப்பாக நீதிக்கான புனித இடங்களில் ஏற்றுக்கொள்ள முடியாதது, கடுமையான முறையில் கண்டிக்கப்பட வேண்டும்.
குழப்பங்களுக்கு மத்தியில் நீதிபதி கவாய் கூறிய அமைதியான மற்றும் கண்ணியமான பதில், அவரது நேர்மை, தைரியம் மற்றும் நமது அரசியலமைப்பின் கொள்கைகளில் உறுதியான நம்பிக்கைக்கு சான்றாக நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.