
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலின்போது தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தவெகவினர் தாக்கிய விவகாரத்தில், அந்தக் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி இரவு விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் அவர்களை காப்பாற்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் கரூர் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ஈஸ்வரமூா்த்தி என்பவர் தனது ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சென்றார்.
அப்போது, வாகனத்தை மறித்த தவெகவைச் சேர்ந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து ஈஸ்வர மூா்த்தி அளித்த புகாரின்பேரில், கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் போலீஸார் தரப்பில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் தவெகவினர் 10 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஐ. ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரை தவெகவினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக, தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசனை, சிறப்புக் குழு காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைப்பதற்காக கரூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய... வெளியான அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.