
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருக்கும் ரெளடி நாகேந்திரன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, கடந்தாண்டு ஜூலை மாதம் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, ரெளடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன்,அரசியல் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் உள்பட 27 பேரைக் கைது செய்தது. ரெளடி திருவேங்கடம் என்பவர் காவல்துறை என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்குவதற்காக, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்தபடியே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம்தீட்டியதாக ரெளடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை மோசமடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கெனவே, அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் வியாழக்கிழமை காலை நாகேந்திரன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.