
தமிழகத்தில் கிராமப்புற மற்றும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் இலவசமாக இட்லி கடை திரைப்படத்தைக் காணும் வகையில், நடிகர் தனுஷ் மற்றும் திரைப்படம் நிறுவனம் வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழக அரசு இட்லி கடை திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் கிராமப்புற மற்றும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் இலவசமாக இட்லி கடை திரைப்படத்தைக் காணும் வகையில், நடிகர் தனுஷ் மற்றும் திரைப்படம் நிறுவனம் வழிவகை செய்ய வேண்டும்.
தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள 'இட்லி கடை' தமிழ் திரைப்படம் நம்முடைய சமூக, பண்பாடு, கலாசாரத்தின் ஆணி வேராக, நேர்மறை எண்ணங்களை விதைத்து, கலைத்திறன் மிக்க படைப்பாக, குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து வயதினரிடம் அகிம்சையை போதிக்கும் அற்புத படைப்பாக வெளிவந்துள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் அருண் விஜய், ராஜ் கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மெனன் ஆகியோர் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இட்லி கடை திரைப்படம் படம் பார்க்கும் ஒவ்வொரு மாணவனின் இளைஞனை ரசிகனின் மனதில் உள்ள தீய எதிர்மறை எண்ணம் கொண்ட அழுக்குகளை, துவைத்து தூய்மையான சிந்தனையாக மாற்றி, தாய் தந்தை உறவின் புனிதம் குறித்தும், ஆன்மிக, இறை சிந்தனையின் வலிமை குறித்தும் அழுத்தமாக நம்மிடம் பதிய வைத்ததை மறுக்க முடியாது மறைக்க முடியாது.
நம்முடைய உடலிலும் உயிரிலும் கலந்துள்ள நாம் பிறந்த மண்ணை நேசிக்கும் எண்ணம், ஜாதி மதத்தை கடந்து நம்மைச் சுற்றியுள்ள சொந்தங்கள் உற்றார் உறவினர்களுடன் உள்ள ஆத்மார்த்தமான பந்தம் காப்பாற்றப்பட வேண்டும். அன்பிற்கும் பாசத்திற்கும் உறவுகளுக்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் நியாயத்திற்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் "இட்லி கடை" திரைப்படம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
படம் முழுக்க கிராமத்து வாழ்க்கை, அமைதியான சூழல், அகிம்சையை அழுத்தமாக மனதில் பதிய வைத்து நகரும் திரை காட்சிகள், அப்பா செஞ்ச தொழிலை, பிடித்து, உணர்வுடன் மகன் செய்றது தவறில்லை. அப்பாவின் தொழிலை கற்றுக்கொண்ட மகன், தன்மானத்துடன் சுய கௌரவத்துடன், தன்னுடைய சுய தொழிலில் உச்சத்தை அடைவதற்கு எதுவுமே தடை இல்லை என்பதையும் எதார்த்த காலத்திற்கு ஏற்றார் போல மிகவும் பாசிட்டிவ் ஆக சொல்லப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.