காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியதால்தான் விஜய் வெளியேறினார்: உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு

காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாலேயே விஜய் வெளியேறியதாக உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதம்.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on
Updated on
1 min read

புது தில்லி: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசல் ஏற்பட்டு மக்கள் பலியான போது, காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாலேயே, கட்சித் தலைவர் விஜய் அங்கிருந்து வெளியேறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் செப். 27ஆம் தேதி நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து தவெக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்துவது மட்டும் போதாது, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இன்று பகல் 12 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில், தவெக தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தவெக தரப்பில், சம்பவம் நடந்தபோது, விஜய் அங்கிருந்தால், மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் நேரிடலாம் என்பதால், காவல்துறையினர்தான், விஜய் அங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாலேயே, சம்பவ இடத்திலிருந்து தவெக தலைவர் விஜய் அங்கிருந்து வெளியேறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களையும் தவெகவினர் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால், நியாயமான விசாரணை வேண்டும் என தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த ஒரு தரப்பையும் சாராத விசாரணை வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. மாநில அரசின் விசாரணைக் குழு மீது நம்பிக்கை இல்லை, அது, தமிழ்நாடு காவல்துறை அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மை வெளியே வர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றமே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்.27ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்டத்தின்போது, எதிர்பாராதவிதமாக நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகினர். 60 பர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு, விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தில் தற்போது தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com