கரூர் நெரிசல் வழக்கை சென்னை அமர்வு விசாரித்தது ஏன்? உச்ச நீதிமன்றம்

கரூர் நெரிசல் வழக்கை சென்னை அமர்வு விசாரித்தது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
கரூர் நெரிசல்
கரூர் நெரிசல்படம் | எக்ஸ்
Published on
Updated on
2 min read

புது தில்லி: கரூரில், தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து, மதுரை கிளையில் விசாரணை நடைபெற்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது ஏன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

செப்.27ஆம் தேதி, கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில், விஜய் பிரசாரம் செய்தபோது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இது தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள், முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹ்தகி, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆஜராகி, வாதங்கள் முன் வைத்தனர்.

தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மதுரை அமர்வில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த என்ன அவசியம் ஏற்பட்டது? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், சென்னை, மதுரை நீதிமன்றங்கள் ஒரே நாளில் எப்படி வேறு வேறு உத்தரவுகளை பிறப்பித்தன என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியாக எழுப்பியிருக்கிறார்கள்.

இது கொடூரமான மரணம் என்பதால்தான் உயர் நீதிமன்றம் இதில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று வழக்குரைஞர் வில்சன் கூறினார்.

இதனைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் கோரி மதுரை, சென்னையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இரு நீதிபதிகளும் சென்னையில் தனி நீதிபதியும் மனுக்களை விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்ற கிளை விசாரணைக்கு எடுத்த பின், சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க அவசியம் ஏன் என்றும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள விசாரணைக் குழுவை தலைமை தாங்கும் அதிகாரி அஸ்ரா கர்க், சிறந்த அதிகாரி. சிபிஐயில் சிறப்பாக பணியாற்றியவர். எஸ்ஐடி விசாரணை அதிகாரியை தமிழக அரசு தேர்வு செய்யவில்லை. நீதிமன்றமே தேர்வு செய்தது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதா என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஒரே நாளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதே இது என்ன விதமான நடைமுறை? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், தவெகவுக்கு எதிரான வழக்கு கிரிமினல் வழக்காக பட்டியலிடப்பட்டது ஏன் என்று கட்சி சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, 41 பேர் இறந்ததால்தான் இந்த வழக்கு கிரிமினல் வழக்காக பட்டியலிடப்பட்டது என்று அரசு பதிலளித்துள்ளது.

தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை உயிரிழந்தவர்களின் உறவினர்களை விஜய் இன்றுவரை சென்று பார்க்கவில்லை என்று தமிழக அரசு கூறியிருந்தது.

விஜய், கரூர் சென்றாரா? இல்லையா? என்பது வழக்குக்குத் தொடர்பில்லாதது. வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வழக்கு உள்ளபோது மற்ற மனுக்களில் உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? என்றும் கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com