
தமிழகத்தில் தஞ்சை உள்பட 6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
குழந்தைகள் போலியோ வைரஸ் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் அவ்வப்போது போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, சிவகங்கை , திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 286 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும்பணி நடந்து வருகிறது. இதற்காக நகரப் பகுதிகளில் 128, ஊரகப் பகுதிகளில் 1481 என மொத்தம் 1609 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் 5819 பணியாளர்கள், 178 மேற்பார்வையர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனையில், பேருந்து நிலையம் ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகின்றன. மாலை 5 மணி வரை இந்த முகாம் மூலம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.