
புது தில்லி: கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்றம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்றும், இந்த கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாடுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு குறிப்பிட்டுள்ளது.
தமிழக காவல்துறை அதிகாரி தலைமையில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தவெக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்.27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத தவெக தலைவர் விஜய் பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்துகளையும் நீக்கக் கோரி, தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என்றெல்லாம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அதனை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், தவெக தரப்பு வாதங்களை ஏற்று, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும் அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக இதைக் கருதுவதாகவும், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மக்களின் உரிமை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
மனுதாரர்களுக்குத் தெரியாமல் மனு
மனைவி மற்றும் பிள்ளையை பிரிந்து வாழ்ந்து வரும் பன்னீர்செல்வம் என்பவர், பிள்ளை இறந்தது குறித்து குடும்பத்தாருக்கு தெரியாமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும், மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடம் அதிமுகவினர் போலியாக கையெழுத்த வாங்கி மனு தாக்கல் செய்ததாகப் புகார் எழுந்தது.
மனுதாரர்களுக்குத் தெரியாமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளனர் என அபிஷேக் சிங்வி வாதத்தை முன் வைத்த நிலையில், கணவர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக, அவரது மனைவி காணொலி வாயிலாக ஆஜராகி, தவெகவின் நிவாரணத் தொகைக்காக பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்ததாக சிறுவனை இழந்த தாய் சாட்சியமளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.