
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அரசு அமைத்த அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் தொடரும் என்று திமுக எம்பியும், வழக்குரைஞருமான வில்சன் தெரிவித்தார்.
தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய தவெக மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பியும், வழக்குரைஞருமான வில்சன் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அரசு அமைத்த விசாரணை ஆணையம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை.
யார் மீது தவறு, யாரால் நடந்தது என்பதை சொல்ல அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு உரிமை உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால் பாதிக்கப்பட்டோருக்கு எந்தப் பயனும் இல்லை. தவெக தரப்பு சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
சிபிஐ விசாரிக்கும் உத்தரவை இடைக்காலமாக நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது தெரிந்தால் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்யும். இறுதி உத்தரவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். உயர் நீதிமன்ற உத்தரவில் தமிழக அரசின் தலையீடு இல்லை.
உயர் நீதிமன்ற உத்தரவில் அரசு தலையிட்டதாக ஆதவ் கூறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். வாய்க்கு வந்தபடி தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.