
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்திய முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத தவெக தலைவர் விஜய் பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்துகளையும் நீக்கக் கோரி, தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்றம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வரம்புக்குள் வரும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரணை நடத்தியது குறித்து பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
மேலும், “கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தவெக எதிர் மனுதாரராக சேர்க்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக எப்படி உத்தரவு பிறப்பித்தது?. தலைமை நீதிபதியின் அனுமதியின்றி, மதுரை அமர்வில் நடைபெறும் வழக்கை, சென்னையில் உள்ள தனி நீதிபதி அமர்வு விசாரிக்க எந்த தேவையும் இல்லை. ரிட் குற்ற வழக்காக எப்படி பதிவு செய்து விசாரணை மேற்கொண்டீர்கள்? இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.