கரூர் சம்பவம்: 41 பேர் உயிரிழப்புக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது பற்றி...
கரூர் சம்பவம்: 41 பேர் உயிரிழப்புக்கு சட்டப்பேரவையில் இரங்கல்
Updated on
2 min read

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்துக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 8 பேரின் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த ச.புரட்சிமணி (மங்களூர்), சு. குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கோவிந்தசாமி (காவேரிப்பட்டினம்), ஓ.எஸ். அமர்நாத் (மதுரை கிழக்கு), ஆ.அறிவழகன் (கிருஷ்ணராயபுரம்), துரை அன்பரசன் என்கிற ராமலிங்கம் (நெல்லிகுப்பம்), ம.அ. கலீலுர் ரகுமான் (அரவக்குறிச்சி), இரா.சின்னசாமி (தருமபுரி) ஆகிய 8 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிஷம் எழுந்து அமைதி காக்கும்படி பேரவைத் தலைவர் கேட்டுக் கொண்டார். அதன்படி அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக கட்சியின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது:

கடந்த செப். 27-ஆம் தேதி கரூரில் அரசியல் கட்சியின் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து இந்தப் பேரவை அதிர்ச்சியும், தாங்க முடியாத துயரமும் கொள்கிறது. இந்தத் துயரச் செய்தி அறிந்ததும் முதல்வர் அன்றிரவே கரூருக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பலத்த காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களையும் சந்தித்துப் பேசினார். சிகிச்சை பெறுபவர்களுக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க உத்தரவிட்டார். சிகிச்சையில் இருந்தவர்களுக்கு அனைத்து விதமான சிறப்பு ஏற்பாடுகளையும் துரிதப்படுத்த அமைச்சர்களை உடனே கரூருக்கு அனுப்பி வைத்தார். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று இப்பேரவை தெரிவிக்கிறது.

கரூர் துயரச் சம்பவத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றவும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த இரண்டு நிமிஷம் மௌனம் காக்கவும் கேட்டுக் கொள்கிறேன் எனும் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

சட்டப்பேரவை ஒத்திவைப்பு: மேலும், கேரள மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மைச் செயலராக இருந்த பீலா வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அவர்களது மறைவுக்கு எம்.எல்.ஏ.க்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடவுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரம் முதலில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் பிறகு 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். இதன் மீதான விவாதம் அக்.16-ஆம் தேதி நடைபெறும். 17-ஆம் தேதி நிதியமைச்சர் பதில் அளிப்பார். அதன் பிறகு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்படும்.

Summary

Tributes paid to the victims of Karur Stampede in TN Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com