
அதிமுகவின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மடல் அனுப்பியுள்ளார்.
அதிமுகவின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.
வாழ்த்து மடலில் அவர் தெரிவித்ததாவது, விலைவாசி உயர்வுகளால், தமிழக மக்கள் தலையில் வரிச் சுமைகளை சுமத்தி, சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது இந்த திமுக அரசு.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயமும், கஞ்சா புழக்கமும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. தமிழக மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசோ, மக்களைக் காப்பாற்றாமல், அவர்களைப் புதைகுழியில் தள்ளியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ``தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள்விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், அதிமுக பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும். தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது.
பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. வருகின்ற 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைவதை எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும், கழகத்தின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
கழகம் 54 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தில், பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி, சட்டம்-ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள இந்த திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை எழுதி; அல்லும் பகலும் கண்துஞ்சாது களப் பணியாற்றி, பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்திட இந்த இனிய நன்னாளில், நாம் அனைவரும் உளமார உறுதியேற்போம்’’ என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: கச்சத்தீவு மீட்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.